கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழும்
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறாது. ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே திகழும். இதன் மூலம் ஆட்சியின் அரசனாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திகழ்வார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும்வரை அரசுடன் இணைந்தே போட்டியிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸின் கருத்துகளும் – அறிக்கைகளும் வெளிவந்த போதிலும் இறுதி நேரத்தில் ரவூப் ஹக்கீம் எடுத்த முடிவு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் சக்திக்கு உரம் கொடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அநேகமான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்காமல் யானைச் சின்னத்திற்கே வாக்களித்திருப்பார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் இறுதி நேர வியூகம் சரியானதே.
இந்தக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையான 19 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெற மாட்டா என்பது உறுதியானதே. இந்த நிலையில் யார் ஆட்சியமைப்பதாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படும் என்பது உறுதியாகி விட்டது.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்இ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதால் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களில் கணிசமான தொகையினர் வாக்களிக்கவில்லை. ஆனால் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மரச் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.
இதனால் கடந்த தேர்தலை விட இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்பது உறுதியானதாகும். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்தும் அநேகமானவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பங்காளிக் கட்சியாகத் தானே இருக்கிறது. எனவே வெற்றிலைச் சின்னத்திற்குப் போடும் வாக்கை மரச்சின்னத்திற்குப் போடலாம் என்ற கருத்தும் வாக்காளர் மத்தியில் இருந்து வருவதை தேர்தல் களநிலவரங்களிலிருந்து அறிய முடிகிறது.
அரசின் பங்காளியாக நீதியமைச்சுப் பொறுப்புடன் அமைச்சரவை அந்தஸ்துடன் இருந்து கொண்டு அரசை விமர்சிக்க முடியாத நிலையில் இருந்தாலும் ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவு தேடி ரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசி ஆதரவு தேடிக்கொடுத்தமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புறந்தள்ள முடியாது.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருக்கின்ற போதிலும் பிரதேச அபிவிருத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. ஆனாலும் தேர்தல் வருகின்ற போது அதை மக்கள் மறந்துவிட்டு மரச்சின்னத்திற்கு வாக்களிக்கின்ற தன்மையைக் கொண்டிருக்கிறார்கள். இது மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் ஏற்படுத்திய சமூக உணர்வு என்று சொல்லலாம்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடப்போகின்றது என்ற செய்தி வெளியானதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஏனைய பிரதிநிதிகளும் மிகவும் கடுகடுப்புடன் கூடிய விமர்சனங்களை வெளியிட்டனர். இறுதித் தருணத்தில் ஹக்கீம் எடுத்த முடிவில் இரு தரப்பும் மகிழ்ந்து வரவேற்று பரஸ்பர உறவான கருத்துகளையும் வெளியிட்டு நட்புக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இத் தேர்தல் முடிவில் ஒரு கனவு இருக்கிறது. அது முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சியமைப்பதென்பதாகும்.
அந்தக் கனவு நிறைவேறுவதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும்இ கடந்த காலத்தில் ஆயுததாரிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் போது தமிழ் அரசியல் தலைமைகள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததைப் போன்ற பல விடயங்களைச் சொல்லலாம்.
இருந்த போதிலும் அன்றைய ஆயுததாரிகளின் அச்சுறுத்தலால் மௌனம் காத்திருந்தாலும் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களை அரவணைத்துப் பேசுகின்ற தன்மையும் முஸ்லிம்களைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு காணமாட்டோம் என்கின்ற கருத்துச் செறிவான பேச்சுகள் தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சாதகத் தன்மையைக் காட்டுகின்றது.
சிறுபான்மை மக்களின் புனிதமான பள்ளிவாசல்களும் கோயில்களும் இன விரோத பயங்கரவாதிகளால் உடைத்து நொருக்கப்படுகின்ற போது ஒரே மொழி பேசுகின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு அரசியல் மூலம் தங்கள் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கின்றது.
பயங்கரவாதத்தால் சிறுபான்மை மக்கள் இழந்தவற்றை மீண்டும் பெறவேண்டியிருக்கிறது. அது மாத்திரமன்றி வளர்ந்து வரும் இளைய தலையமுறையினர் இன வன்முறைகளை மறந்து இன நல்லுறவுடன் கூடிய பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதேநேரம் அமைச்சரவை அந்தஸ்த்துடன் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசைவிட்டு வெளியேற வேண்டுமாயின் அமைச்சுப் பதவியை துறந்துதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்க்க வேண்டும்.
அப்படிப்கைகோர்க்க முனையும் ரவ+ப் ஹக்கீம் எந்தவித அரசியல் பலமும் இல்லாத நிலையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும் அரசை விட்டு வெளியேறினால் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமை விட்டுப்பிரிந்து அரசுடன் இணையமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.
அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பெறவேண்டுமென்பதில் சில முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் முனைப்புடன் செயற்படுகின்றனர். ஆகவே தலைவர் ஹக்கீம் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும். ஆகவே மிகவும் நிதானமாகக் காய்நகர்த்த வேண்டிய தேவை ஹக்கீமுக்கு இருக்கிறது.
மேலும் ஒரு பிரச்சினையும் ஏற்படலாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணசபையை ஆட்சிசெய்வதற்கு ஒருசில உறுப்பினர்கள் தேவைப்பட்டால் அதை விலை கொடுத்து வாங்குவதற்கு அரசு முயற்சிக்கும். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளின் பக்கமும் ஆளும் அரசின் கவனம் திரும்பலாம். இதுவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குப் பெரும் தலையிடியைத்தான் கொடுக்கும் ஆகவே அரசுடன் இணைவதுதான் இறுதி முடிவாக இருக்கலாம்.
அப்படியொரு முடிவு வரும்போது சிறுபான்மை மக்களின் பள்ளிவாசல்கள் கோயில்கள் உடைப்பு காணி சுவீகரிப்பு இனப் பயங்கரவாதிகளின் தர்பார் போன்ற விடயங்களைத் தீர்ப்பதற்கான முக்கியத்துவத்துடனான பேச்சுக்களை அரசுடன் பேசி நிரந்தரத் தீர்வுகளைக் காணவேண்டிய பொறுப்பும் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கிறது.
கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்புகள் அல்லது முதலமைச்சர் என்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுமாயின் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மாறிவிடும் என்பது தவிர்க்கமுடியாமல் போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.
இந் நிலையில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தேசிய காங்கிரஸ் தலைமையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் ஒரே அரசில் ஒரே அமைச்சரவையில் இருந்துகொண்டு ஏட்டிக்குப் போட்டியான விடயங்களை முன்னெடுப்பது முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அமைச்சர் அதாவூல்லாவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முட்டி மோதிக்கொள்வது மஹிந்த ராஜபக்ஷ அரசுக்குச் சாதகமாகவே போய்விடும். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் சமூகமே என்பதை இரு தலைமைகளும் உணர்ந்து செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.
கட்சி விட்டு கட்சி மாறுகின்ற போலித்தனமான அரசியல்வாதிகளுக்கு கட்சிகள் முடிவுகட்ட வேண்டும். வாக்களித்து வெற்றிபெறச்செய்கின்ற மக்களிடம் எந்தவிதக் கருத்துகளையும் பெறாமல் அரசியல் இலாபத்திற்காகக் கட்சி மாறுகின்றவர்களை புறந்தள்ளுவதற்கு கட்சித் தலைமைகள் முன்வரவேண்டும்.
நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் அமையப்போவது முஸ்லிம் தமிழ் ஆட்சியா? அல்லது முஸ்லிம் சிங்கள ஆட்சியா? அதை தீர்மானிக்கும் நாள் செப்ரெம்பர் 8. அதுவரை பொறுத்திருப்போம். -சுடர்ஒளி-


